இந்தியாவிற்கு தப்பிச் சென்ற இலங்கையர்கள் மூவர் நாடு கடத்தப்பட்டனர்!!

666

மன்னாரிலிருந்து கடல்வழியாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற இலங்கையர்கள் மூவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த இலங்கையர்கள் மூவர் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி மன்னாரிலிருந்து கடல்வழியாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது இந்த இலங்கையர்கள் மூவரும் இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து இலங்கையர்கள் மூவரும் நேற்று வியாழக்கிழமை (03) மாலை 05.20 மணியளவில் இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது இந்த இலங்கையர்கள் மூவரும் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் புத்தளம் விசேட குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த நபர் நீ்ர்கொழும்பு நீதிமன்ற உத்தரவின் கீழ் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.