நண்பர்களுக்கு இரவு இரங்கல் தெரிவித்த இளைஞன் காலையில் உயிரிழந்த சோகம்!!

975

யாழில் நேற்று மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் நண்பன் இன்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளமை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

தனது நண்பனுக்கான அனுதாப செய்தியை முகநூலில் பதிவேற்றிய சிலமணிநேரத்திலேயே குறித்த இளைஞனும் உயிரிழந்துள்ளமை சமூக ஊடகவாசிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு நேற்று விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பலியாகினர்.

சம்பவத்தில் அதி வேகத்தில் பயணித்த இளைஞர்கள் இருவரும் வீதியின் குறுக்கே வந்த மாட்டைக் கடப்பதற்காகத் முயற்சித்த போது எதிரே இருந்த மின்சார கம்பத்துடன் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் கந்தரோடை சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 17, 18 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தனது நண்பனின் இழப்பை அறிந்து இரங்கலை வெளியிட்ட குறிப்பிட்ட கால இடைவெளியில் அவரும் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனும் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், திடீர் நெஞ்சுவலியால் பாதிப்புற்று உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு துஜீவன் (வயது 27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர். இந்நிலையில் குறித்த இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதன்போது உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர். இருப்பினும் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

எனினும் அவரது நண்பர்கள் சிலர் தலைமறைவாகிய நிலையில் சுன்னாகம் பொலிஸ் அவர்களை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.