வவுனியாவில் பள்ளிவாசல் அருகே தொடரும் அனுமதியற்ற கட்டுமானம் : மாநகரசபை நடவடிக்கை!!

1578

வவுனியா நகரில் பள்ளிவாலுக்கு அருகே கட்டப்படும் அனுமதியற்ற கட்டிடட நிர்மாணத்திற்கு எதிராகவும் அப்பகுதியில் அமைந்துள்ள மேலும் சில வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மாநகரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஹொரவப்பொத்தானை வீதியில் நகர பள்ளிவாசல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் மாநகரசபையின் அனுமதியின்றி நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்,

இன்று (07.07) குறித்த இடத்திற்கு விஐயம் மேற்கொண்ட மாநகர துணை முதல்வர், ஆணையாளர், செயலாளர் ஆகியோர் கட்டுமானத்தினை பார்வையிட்டதுடன் அனுமதியின்றி தொடர்ச்சியாக இக் கட்டுமானத்தினை தொடர வேண்டாம் என கட்டளை விதித்தமையுடன் எச்சரிக்கை அறிவித்தலையும் ஒட்டினர்.

மேலும் மரக்கறி சந்தைக்கு முன்பாக மாநகரசபைக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள இரு வர்த்தக நிலையங்களுக்கு குறித்த வர்த்தக நிலையத்தினை அகற்றுமாறு தெரிவித்து எச்சரிக்கை சுவரொட்டியும் ஒட்டப்பட்டுள்ளன.

அத்துடன் நகரை அழகுபடுத்தும் முகமாக இலுப்பையடிசந்தியில் வீதியோர வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (14.07) திகதிக்கு முன்பாக அவ்விடத்திலிருந்து அகன்று பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள மாநகரசபைக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக கூடாரங்களை அமைத்து இருக்குமாறும் மீறினால் மாநகரசபையினால் இலுப்பையடி வீதியோர வியாபார நிலையம் அகற்றப்படும் எனவும் மாநகரசபையினர் தெரிவித்துள்ளனர்.