வவுனியா கூமாங்குளத்தில் வானத்தை நோக்கி மூன்று தடவை துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிசார் : ஒருவர் உயிரிழப்பு : இரு பொலிசார் வைத்தியசாலையில்!!

7016

வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்றிரவு (11.07.2025) மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் சம்பவ இடத்திலிலேயே பலியாகியிருந்தமையினால் அவ்விடத்தில் பதற்றநிலமை ஏற்பட்டதுடன் பொலிஸாரின் வாகனங்களும் சேதமாக்கப்பட்டிருந்தமையுடன் பொலிஸாரின் வான் நோக்கி மூன்று தரம் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டதுடன் பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளாகி இரு பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு 10 மணியளவில் கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் போக்குவரத்து பொலிசார் வந்துள்ளனர்.

இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை துரத்திச்சென்றதுடன் அவரது வாகன சக்கரத்தில் தடையினை ஏற்ப்படுத்தியதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இதனை அவதானித்த இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆத்திரமடைந்து பொலிசாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தியமையுடன் மேலும் ஆத்திரத்தில் சம்பவத்திற்கு காரணமான இரு பொலிஸார் மீதும் பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டனர்.

அடாவடியான இச்செயற்பாட்டிற்கு நீதி கிடைக்கவேண்டும் என தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்டநேரமாக சிறைப்பிடித்து வைத்தமையுடன் இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டதுடன் இதனை கட்டுப்படுத்த வான் நோக்கி மூன்று தரம் பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளாகிய இரு பொலிஸார் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இச் சம்பவத்தில் தீவிர விசாரணை முன்னெடுக்க வேண்டுமென மக்கள் தெரிவித்துள்ளமையுடன் சந்தேகங்களும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்திற்கு அருகே காணப்பட்ட பொலிஸாரின் பெயர் சின்னம் எவ்வாறு வந்தது?, உயிரிழந்த நபருக்கும் பொலிஸாருக்கிடையே தள்ளுமுள்ளு எதேனும் ஏற்பட்டதா?, மோட்டார் சைக்கிளின் சக்கரத்தினுள் தடி எவ்வாறு வந்தது? யார் வீசியது, பொலிஸார் ஏன் அவரை விரட்டினர் போன்ற பல்வேறு வினாக்களுக்கு பதிலில்லை.

இவ்விடயம் தொடர்பாக பாதுகாப்பு பிரிவினரை நாம் வினாவிய போது, பொலிஸாரின் கட்டளையினை மீறி அவர் சென்றமையினால் பொலிஸார் அவரை துரத்திச் சென்ற சமயத்தில் அவர் தடுமாறி கீழ வீழ்ந்து உயிரிழந்ததாகவும் அதன் பின்னர் பொதுமக்கள் பொலிஸார் துரத்தி வந்து அவரின் மோட்டார் சைக்கிலின் சக்கரத்திற்கு தடையினை ஏற்படுத்தியமையினால் அவர் உயிரிழந்தாக தெரிவித்து பொலிஸார் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுவதுடன்,

மேலும் மற்றுமொரு கோணத்தில் சந்தியில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயத்தில் கூமாங்குளம் மதுபானசாலைக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில்,

அவ்விடத்திற்கு பொலிஸார் சென்றதாகவும் அதனையடுத்து பொதுமக்கள் பொலிஸார் துரத்தி வந்து அவரது மோட்டார் சைக்கிலின் சக்கரத்திற்கு தடையினை ஏற்படுத்தி அவர் உயிரிழந்தாக தெரிவித்து பொலிஸார் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுவதுடன்,

மற்றுமொரு கோணத்தில் பொலிஸார் துரத்தி சென்றும் பொலிஸாரின் கட்டளையினை மீறி அவர் பயணித்தமையினால் பொலிஸார் மோட்டார் சைக்கிலின் சக்கரத்திற்கு தடையினை ஏற்படுத்தினர் அதன் அவர் கீழே வீழ்ந்து உயிரிழந்தார் எனவும்,

இவ்வாறு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் நீதியானதும் நியாமானதுமான விசாரணைகளுக்கு தாம் சகல பாதுகாப்பு பிரிவினருக்கும் தெரிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலுள்ள சிசிரிவி கமராவின் உதவியுடனும் பொதுமக்களின் வாக்குமூலத்துடனும் விசாரணைகளை வவுனியா தலைமை பொலிஸார் துரிதப்படுத்தியுள்ளமையுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமையுடன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.