அவுஸ்திரேலியாவில் இந்திய அணி மண்ணை கவ்வும் : மெக்ராத் சவால்!!

438

Mcgrath

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியா 4 டெஸ்டிலும் கணடிப்பாக தோற்கும் என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளைன் மெக்ராத் சவால் விட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1–3 என்ற கணக்கில் மோசமாக பறிகொடுத்தது இந்திய கிரிக்கெட் அணி.

இதைத் தொடர்ந்து டிசம்பர் – ஜனவரி மாதங்களில் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகளிலும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் (3வது அணி இங்கிலாந்து) விளையாட இருக்கிறது.

இந்நிலையில் வெளிநாட்டு மண்ணில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணிக்கு அவுஸ்திரேலிய தொடரில் ஒரு வெற்றியும் கிடைக்காது என கிளைன் மெக்ராத் ஆரூடம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், அவுஸ்திரேலிய அணி, உலகில் எங்கு விளையாடினாலும், தங்களது முழு திறமையை கணிசமாக வெளிப்படுத்தினாலே அவர்களை வீழ்த்துவது என்பது உண்மையிலேயே கடினமான காரியம். இந்நிலையில் இந்திய அணி அவுஸ்திரேலியாவிடம் மோதவுள்ளது.

கடந்த ஆண்டு இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆடிய போது, 0–5 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது.

எங்களிடம் தோல்வி கண்ட அந்த இங்கிலாந்து அணி தற்போதைய தொடரில் சிறப்பாக விளையாடி இந்தியாவை 3–1 என்ற கணக்கில் வீழ்த்தி இருக்கிறது.

எனவே கண்டிப்பாக இந்திய அணிக்கு அவுஸ்திரேலிய தொடர் மிகவும் கடினமாக இருக்கப்போகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், அவுஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி எந்த ஒரு டெஸ்டிலும் வெற்றி பெறும் என்று நான் நினைக்கவில்லை. எனது கணிப்பு அவுஸ்திரேலியா தொடரை 4–0 என்ற கணக்கில் கைப்பற்றும் என்பது தான்.

எனது கணிப்பு தவறு என்பதை நிரூபிக்க வேண்டியது இந்திய அணியை பொறுத்தது. மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவதற்கான வழிமுறைகளை இந்திய வீரர்கள் கண்டறிய வேண்டும் என்று கூறியுள்ளார்.