
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை வீரர் ஜெயவர்த்தன அரசியல் பங்கேற்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்த வெற்றியோடு ஜெயவர்த்தன டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு மஹேல ஜெயவர்த்தன அளித்த பதில்கள் வருமாறு,
எப்போது உங்களுக்கு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் உள்ளது?
2015ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி எனது இறுதி சர்வதேச போட்டியாக அமையும்.
எதிர்காலத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராகும் விருப்பம் உள்ளதா?
கண்டிப்பாக இல்லை. கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக பொறுமை அவசியம். அந்த பொறுமை என்னிடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?
அரசியலுக்குச் சென்றால் நான் வீட்டை விட்டு செல்ல வேண்டி வரும்.
விளையாட்டு ரசிகர்களுக்காக நீங்கள் சொல்லும் செய்தி?
நான் உங்கள் அனைவர் மீதும் அன்பு செலுத்துகிறேன். பல வருடங்களாக எனக்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றி. எனது கிரிக்கெட் வரலாற்றில் இன்னும் ஒரு சிறிய பகுதி உள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் எனது முழு சக்தியையும் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளேன். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் அழ மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.
எனது அணி வீரர்களுக்கு நன்றிகள். நீண்ட காலம் இலங்கை அணிக்காக விளையாடக் கிடைத்தது என் அதிஷ்டமே என்று பதிலளித்துள்ளார்.





