
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் தனியார் பள்ளியில் படித்து வரும் 3ம் வகுப்பு மாணவி ஆதித்ரி சிங். இவர், கடந்த சனிக்கிழமை தண்ணீர் குடிக்க முயற்சித்த போது பாட்டிலின் பிளாஸ்டிக் ஸ்க்ரூ மூடியில் அவரது நாக்கு சிக்கிக்கொண்டது.
இது ஒரு சாதாரண விஷயம் போலத் தோன்றினாலும், சிறுமி மூடியை அகற்ற முயற்சிக்கும்போது, நாக்கு மேலும் சிக்கிக்கொண்டு வலியால் கதறித் துடித்தார். சிறுமியின் அழுகையை பார்த்து வகுப்பு ஆசிரியர் உடனே உதவி செய்தார்.
ஆனாலும், மூடியை எடுக்க முடியவில்லை. உடனடியாக பள்ளி நிர்வாகம் மாணவியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.
அங்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், ராஜேந்திர நகரில் உள்ள ஈ.என்டி நிபுணர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
நுட்பமான அறுவை சிகிச்சை மூலம், மருத்துவர் மூடியை வெட்டி, நாக்கை பாதுகாப்பாக வெளியே எடுத்து, சிறுமியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். தற்போது மாணவி முழுமையாக மீண்டு, ஆரோக்கியமாக உள்ளார்.
இச்சம்பவம் பெற்றோர்களிடமும் பள்ளிகளிடமும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் தந்தை வினீத் சிங், “பள்ளி ஆசிரியர்களின் சிக்கன நடவடிக்கையும், மருத்துவரின் தன்னலமற்ற சேவையும் என் மகளின் உயிரை காப்பாற்றியது,” என நன்றி தெரிவித்துள்ளார்.
சாதாரணமாகத் தோன்றும் ஒரு விஷயம் கூட குழந்தைகளுக்கு பெரிய ஆபத்தில் முடியலாம் என்பதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





