
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், லாரி மீது பைக் மோதி விபத்திற்குள்ளானதில், பைக்கில் சென்ற அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா நவதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். மாரியம்மன் கோவில் பூசாரியான இவருடைய மகன் மதன் (14). மத்திகிரி கூட்டு ரோடு அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்த மதன்,
அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த ஆரியன் சிங் (13), அதே பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படித்து வந்த ஹரீஷ் (14) ஆகிய 3 பேரும் நண்பர்கள்.
இந்நிலையில் நேற்று மாலை, பள்ளிக்கு செல்லாத மதன், தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு பள்ளி அருகில் சென்றுள்ளான்.
அங்கு ஆரியன் சிங்கை ஏற்றிக் கொண்டு அந்திவாடி சென்று, அங்கிருந்த ஹரீசை ஏற்றிக் கொண்டு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இவர்களது வாகனம் மத்திகிரி கூட்டு ரோடு பக்கமாக சென்றுக் கொண்டிருந்த போது, அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் ஆரியன்சிங் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தான்.
மற்ற இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மதன், ஹரீஷ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்ததும் மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் 3 மாணவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் 3 மாணவர்கள் பலியான தகவல் அறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அனில் அக்ஷய் வாகரே ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
இது தொடர்பாக மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஓசூர் அருகே லாரியின் பின்புறம் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.





