வவுனியா நெற் ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீஷனுக்கு ஊடகத்துறைக்கான கலாநேத்ரா விருது!!

861

நேற்று (18.07.2025) இடம்பெற்ற வவுனியா பிரதேச செயலக கலாசார விழாவில் வவுனியா நெற் இணையத்தின் இளம் ஊடகவியலாளரான பாஸ்கரன் கதீஷன் ஊடகத்துறைக்கான கலாநேத்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2013 ஆம் ஆண்டு தனது 17 வயதில் வவுனியா நெற் இணையத்தின் ஊடகவியலாளராக இணைந்துகொண்ட பாஸ்கரன் கதீசன் வவுனியா மாவட்டத்தின் துணிச்சல்மிக்க இளம் ஊடகவியலாளராகவும் செய்திகளை நேர்மையாகவும் நடுநிலையாகவும் வெளிகொண்டுவருபவராகவும் தன்னுடைய பணியை திறம்பட செய்துவந்தார்.

இவரது துணிச்சல், நேர்மை, விடாமுயற்சி என்பவற்றின் பலனாக ஓர் சில வருடங்களிலேயே சர்வதேச ஊடகங்கள், தேசிய ஊடகங்கள், தேசிய தொலைக்காட்சிகள், வானொலிகள், தேசிய பத்திரிகைகள் என்பவற்றில் ஊடகவியலாளராக பணியாற்றும் சந்தர்ப்பங்களை பெற்றுக்கொண்டு திறமையாகவும் நடுநிலைமையாகவும் செயற்பட்டு வருகின்றார்.

இவருடைய இந்த 13 வருட ஊடகப் பயணத்தில் பல்வேறு சவால்கள், அச்சுறுத்தல்கள், வழக்குகள் காணப்பட்டபோதும் அவை அனைத்தையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு மாவட்டத்தின் மக்கள் பிரச்சனைகளையும், பிரதேச நிகழ்வுகளையும், இலைமறை காய்களாக இருக்கும் கலைஞர்களின் திறமைகளையும் வெளிக்கொண்டுவரும் துணிச்சல்மிக்க இளம் ஊடகவியலாளராக வலம்வருகின்றார்.

இவரது 13 வருட சேவையை பாராட்டி கெளரவிக்கும் முகமாக வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச கலாசார பேரவையும் பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய கலாசார விழாவில் ஊடகத்துறைக்கான கலாநேத்ரா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இவருக்கு வவுனியா மாவட்டத்தின் பல்வேறு துறைசார்ந்தோர் உட்பட வவுனியா மக்கள் பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

வவுனியா நெற் இணையத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய பாஸ்கரன் கதீசனை வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக பாராட்டி வாழ்த்துவதில் நாமும் பெருமைகொள்கின்றோம்.