வெளிநாடொன்றில் கை-கால்கள்-குடல்கள் அழுகிய நிலையில் இலங்கை கடற்றொழிலாளர்கள்!!

942

மடகஸ்கார் சிறையில் இலங்கை கடற்றொழிலாளர்கள் 8 பேர் உணவு -நீர் வழங்கப்படாமல் நோய்க்குள்ளாகி மிக மோசமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவும் ஏனையவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் சிலரின் கை-கால்கள் மட்டுமல்ல, குடல்களும் அழுகிவருவதாக தெரியவந்துள்ளது.

வென்னப்புவவைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் குழு ஒன்று, சர்வதேச கடல் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு 50 நாட்களாக உணவு அல்லது மருத்துவ சிகிச்சை இல்லாமல் அவதிப்படுவதாக இலங்கை சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வென்னப்புவ துறைமுகத்திலிருந்து ஏப்ரல் 5, 2025 CHW 899 என்ற W.P. குமார என்ற பெயரில் பதிவுசெய்யப்பட்ட ‘ருத் பாபா VI’ படகில் புறப்பட்ட தங்கள் குழு, ஜூன் 2 மடகஸ்கார் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எட்டு பேர் கொண்ட தங்கள் மீன்பிடிக் குழுவை மடகஸ்கார் அரசு தடுத்து வைத்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக் கொடியுடன் கூடிய மீன்பிடிக் கப்பலான ரூத் பாபா VI ஐ மடகஸ்கார் கடற்கரையிலிருந்து “பெசலம்பி” பகுதியில் உள்ள செயிண்ட்-ஆண்ட்ரேவின் வடக்கே உள்ள கடல் பகுதியில் 16 டன்களுக்கும் அதிகமான சுறாக்களை சட்டவிரோதமாகப் பிடித்தபோது கைது செய்ததாக மடகஸ்கார் அரச அதிகாரிகள் குறித்த பத்திரிகை வினவிய போது உறுதிப்படுத்தியுள்ளனர்.