வவுனியா வடக்கில் வீதி, பாலம் சீரின்மை : நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்த ரவிகரன் எம்.பி!!

1428

வவுனியா வடக்குப் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பனைநின்றான் கிராமமக்கள், தமது கிராமத்திற்குச்செல்லும் வீதி, பாலம் என்பன சீரின்றிக்காணப்படுவதால் பலத்த இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பபையேற்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பனைநின்றான் கிராமமக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து இடர்பாடுகள் தொடர்பில் நேரடியாகச்சென்று ஆராய்ந்தார்.

குறிப்பாக ஒட்டுசுட்டான் – நெடுங்கேணி பிரதானவீதியிலிருந்து பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் வீதியும், பாலமுமே இவ்வாறு சீரின்றிக்காணப்படுகின்றன.

அவ்வீதியில் மிகமோசமான நிலையில் காணப்படும் மரப்பாலத்தைக் கடந்துசெல்வதில் பனைநின்றான் கிராமமக்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். மழைக்காலங்களில் குறித்த பாலத்தினுடாக முற்றாகப் போக்குவரத்து செய்யமுடியதநிலை காணப்படுவதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இந்தப்பாலத்தை வவுனிய வடக்கைச் சேர்ந்த பனைநின்றான் கிராமமக்கள் பயன்படுத்தினாலும், அந்தப்பாலம் புதுக்குடியிருப்பு பிரதேசசபைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்றது.

எனவே குறித்த பாலத்தினையும் அதனோடு இணைந்த வீதியையும் சீரமைத்து, தமது போக்குவரத்து இடர்பாட்டைத் தீர்த்துவைக்குமாறு பனைநின்றான் கிராமமக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் பனைநின்றான் கிராம மக்களின் போக்குவரத்து இடர்பாட்டைத் தீர்த்துவைப்பது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த களவிஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுடன் வுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சுசீலன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இ.கிரிதரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.