
இந்திய மாகாணம் இமாச்சல் பிரதேசத்தில் சகோதரர்கள் இருவர் ஒரே பெண்ணை ஊரைக்கூட்டி மேளதாளங்கள் முழங்க திருமணம் செய்துள்ளனர்.
இப்படியான வழக்கம் இமாச்சல் பிரதேசத்தின் ஹட்டி பூர்வகுடி மக்களிடையே தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. உல்ளூரில் இந்த வழக்கத்தை ஜோதிதரா என அழைக்கிறார்கள்.
சிராமௌர் மாவட்டத்தின் ஷில்லை கிராமத்தில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த மூன்று நாள் கொண்டாட்டம் ஜூலை 12 ஆம் திகதி தொடங்கி அவர்களின் பாரம்பரிய முறைப்படி நடந்து முடிந்துள்ளது.

ஒரு பெண் பல ஆண்களை, பொதுவாக சகோதரர்களை மணக்கும் இந்த வழக்கம் ஒரு காலத்தில் ஹட்டிகளிடையே, குறிப்பாக சிராமௌர் மாவட்டத்தில் பரவலாக இருந்துள்ளது.
தற்போது அரிதாக இருந்தாலும், ஜோதிதரா நடைமுறை இமாச்சலப் பிரதேசத்தின் வருவாய் சட்டங்களின் கீழ் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலின பூர்வகுடியினராக அறிவிக்கப்பட்ட ஹட்டி சமூகத்தினர், இமாச்சலப் பிரதேசம்-உத்தரகாண்ட் எல்லையில் உள்ள டிரான்ஸ்-கிரி பகுதியில் வசிக்கின்றனர்.
கடந்த ஆறு ஆண்டுகளில், பதானா கிராமத்தில் மட்டும் இதுபோன்ற ஐந்து பலதார திருமணங்கள் நடந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். இந்த பாரம்பரியம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகவே ஹட்டி சமூக மூத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மணமகள் சுனிதா சவுகான் மற்றும் மணமகன்கள் பிரதீப் மற்றும் கபில் நேகி ஆகியோர் இந்த முடிவு வற்புறுத்தலின்றி பரஸ்பரம் புரிதலுடன் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கத்தை மதிப்பதாக கூறும் குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா, இந்த பாரம்பரியத்தை அறிந்திருந்தேன், எந்த அழுத்தமும் இல்லாமல் எனது முடிவை எடுத்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிதரா என்பது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஹட்டி பூர்வகுடியினரிடையே நடைமுறையில் உள்ள ஒரு பாரம்பரிய பலதார திருமண வடிவமாகும், இதில் ஒரு பெண் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சகோதரர்களை மணக்கிறார்.
சகோதரர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பது, கூட்டுக் குடும்ப அமைப்புகளைப் பாதுகாப்பது மற்றும் தொலைதூர, மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் பாதுகாப்பான மற்றும் நிலையான சூழலை உறுதி செய்வது ஆகியவை இந்த பலதார வழக்கத்திற்கு காரணங்களாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
தனித்துவமான இந்த பலதார மண பாரம்பரியத்தில், திருமணத்தை ஜஜ்தா என்று அழைக்கப்படுகிறது, இது மணமகள் மணமகனின் கிராமத்திற்கு ஊர்வலமாக வருவதோடு தொடங்குகிறது.
மணமகனின் வீட்டில் சீஞ்ச் என்று அழைக்கப்படும் ஒரு சடங்கு செய்யப்படுகிறது, அங்கு மந்திரங்களை ஓதி புனித நீரை தெளிப்பார்கள். தம்பதியருக்கு வெல்லம் வழங்கப்படுவதோடு விழா முடிகிறது.





