
ஏர் இந்தியா விமான விபத்தின் பின்னர், விபத்து தொடர்பான அறிக்கை வெளியான போதும், அந்த விமான விபத்து தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
குறித்த விபத்தில் கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் சிதைந்து போயிருந்த நிலையில், அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எச்சங்கள் தொடர்பில் தற்போது சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது.
அந்தவகையில் கொல்லப்பட்ட பெண் ஒருவர் எனக்கூறி அவருடைய மகனுக்கு அனுப்பப்பட்ட எச்சங்கள் வேறு ஒருவருடையது என்று லண்டனில் வசிக்கும் ஒருவர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். இதற்கு இந்திய அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

அகமதாபாத் விமான விபத்தில், தமது தந்தையும் தாயும் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் என்று கூறப்படும் எச்சங்கள், குறித்த மகனுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
எனினும் அதில் தமது தாயின் சடல எச்சங்கள் வேறு ஒருவரின் எச்சங்கள் என்ற அவருடைய மகன் குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னதாக உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட ஒருவரின் எச்சங்களில் பலரின் எச்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்த முறைப்பாடு ஒன்றும் பதிவாகியுள்ளது.
இங்கிலாந்து அரசாங்கம் இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அனைத்து எச்சங்களும் மிகவும் தொழில்முறை கண்ணியத்துடன் கையாளப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது,





