7 வயது பெண் குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை!!

3124

சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வருபவர் 38 வயது சதீஷ். அவரது மனைவி 32 வயது ரெபெகா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுடைய மகள் ஸ்டெபி ரோஸி. சதீஷுக்கும் அவரது மனைவி ரெபேகாவுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓராண்டிற்கு முன்பு மனைவியை தாக்கியதாக சதீஷை போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த சதீஷ், மனைவி ரபேகாவிடம் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு மீண்டும் மனைவியுடன் சதீஷ் தகராறில் ஈடுபட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் இருவரும் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் தனது 7 வயது குழந்தை ஸ்டெபி ரோஸியை சதீஷ்குமார் அழைத்து சென்று ஆலந்தூரில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். புதன்கிழமை காலை சதீஷ் தங்கி இருந்த அறையில் இருந்து ஸ்டெபி கழுத்தறுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சதீஷ் கழுத்தறுக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து போலீசார் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சதீஷை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரின் மனைவி ரெபெகாவிடமும், அவரது குடும்பத்தாரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தையின் உடல் தாயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஓட்டேரியில் சிறுமியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் கொலைக்கு காரணமாக இருந்த குழந்தையின் தந்தை சதீஷ் மற்றும் அவருடைய தாயாரை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை எனக்கூறியும்,

உடனடியாக அவர்கள் இருவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி குழந்தையின் சடலத்தை வைத்து உறவினர்கள் ஓட்டேரியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சதீஷ் தாய் ரெபேகாவை மிரட்டிய ஆடியோவும் வெளியாகி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.