வவுனியா வர்த்தகப் பெருமக்களுக்கு நன்றிகள் : மாநகரமுதல்வர் சு.காண்டீபன்!!

1110

வவுனியா மாநகரசபையின் கோரிக்கையினை ஏற்று நேற்று ஞாற்றுக்கிழமை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கிய வர்த்தகப்பெருமக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக வவுனியா மாநகரசபையின் முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளதுடன் மாநகரசபைக்குட்பட்ட தாண்டிக்குளம் மாடுவெட்டும் மடுவத்தை மூடுமாறு இதுவரை சபையால் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.. ஞாயிறு தினமான இன்று மாநகரசபையின் கோரிக்கையினை ஏற்று வவுனியா வர்த்தகர்கள் தங்களுடைய வியாபார நிலையங்களை மூடி பணியாளர்களுக்கு விடுமுறையினை வழங்கியுள்னர்.

எமது கோரிக்கையினை ஏற்று ஒத்துழைப்பு வழங்கிய மாநகரத்தின் வர்த்தகப்பெருமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாநகரசபை சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதேபோல தனியார் கல்விநிலையங்களும் இன்று மூடப்பட்டு தமது ஒத்துழைப்பினை வழங்கியிருக்கின்றன. எனவே அதுசார்ந்த கல்விச் சமூகத்திற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். இது கல்வி நிலையங்களின் வருமானத்தை வீழ்ச்சியடையச்செய்வதற்கான ஒரு செயற்ப்பாடு அல்ல.

மாறாக மாணவர்களிற்கு அறநெறிக்கல்வியை ஊட்டி அதனுடன் கலை, கலாசாரம் தொடர்பான விடயங்களிலும் அவர்கள் முன்நோக்கிச் செல்லவேண்டும் என்பதற்காகவே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை தற்போது பிரச்சனையாகியுள்ள எமது சபைக்குட்பட்ட மாட்டுத்தொழுவத்தை நாங்கள் ஒருபோதும் மூடவில்லை. அங்கு கடந்த சனிக்கிழமை மின்சாரம் தடைப்பட்டபோதும் சபையின் ஒத்துழைப்புடன் மாடுகள் வெட்டப்பட்டு கடைகளுக்கு இறைச்சி அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் மறுநாள் ஞாயிற்றுகிழமை எந்தவித அறிவித்தலும் இல்லாமல் தொழுவத்தையும் இறைச்சிக்கடைகளையும் அவர்களாக மூடியுள்ளனர். நாங்கள் அதனை மூடுமாறு எந்தவித உத்தியோகபூர்வ உத்தரவையும் இன்றுவரை பிறப்பிக்கவில்லை. என்பதை எமது மாநகர மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த செயற்பாடு மாட்டிறைச்சி தேவையுடைய மக்களை குழப்பும் விதத்திலும் இங்கு ஒரு பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாகவே அவர்களால் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் கிழமைகளில் நடைபெறவுள்ள சபைக்கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படும். அன்றய அமர்வில் எமது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளமுடியாத பல விடயங்களும் வெளிவரும் என்றார்.