
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.
இதில் முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிவாகை சூடியுள்ள இலங்கை அணியை முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் இன்று எதிர்கொண்டது.
ஹம்பாந்தோட்டை – சூரியவெவ மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக சற்று தாமதமாகவே ஆரம்பமானது. மேலும் 50 ஓவர்கள் 45 ஓவர்களாகவும் குறைக்கப்பட்டிருந்தது.
முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி துடுப்புடன் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 89 ஓட்டங்களையும் மஹெல ஜெயவர்த்தன 63 ஓட்டங்களையும் விளாச 45 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களைக் குவித்தது இலங்கை.
பந்து வீச்சில் பாகிஸ்தான் சார்பில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுக்களையும் மொஹமட் இர்பான் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதன்படி 276 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய
பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 26 ஓவர்களில் 106 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது ஆனாலும் 6 விக்கட்டுக்கு ஜோடி சேர்ந்த பவட் அலாம் – சொஹைப் மசூட் இணைப்பாட்டமாக 147 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தான் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
ஒரு பந்து மீதமிருக்கையில் பாகிஸ்தான் அணி 6 விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
பாகிஸ்தான் அணி சார்பாக சொஹைப் மசூட் ஆட்டமிழகாமல் 89 ஓட்டங்களையும் பவட் அலாம் 62 ஓட்டங்களையும் அஹ்மத் ஷேசாத் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணி சார்பாக மத்திவ்ஸ் மற்றும் திசர பெரேரா தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.
இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக சொஹைப் மசூட் தெரிவுசெய்யப்பட்டார்.





