
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கந்தசாமியூர் வடக்கு தயிர்பாளையத்தில் வசித்து வருபவர் 53 வயது வேலுச்சாமி. இவருடைய மனைவி தீபா இருவரும் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர்.
அதே பகுதியில் விசைத்தறி பட்டறையும் வைத்து நடத்தி வந்தனர். இவர்களுடைய மகன் 22 வயது பிரதீப் கோவையில் ஒரு கல்லூரியில் பி.இ. படித்து வந்தார்.
ஏப்ரலில் விடுமுறையில் ஊருக்கு வந்த அவர் தந்தையின் விசைத்தறி பட்டறைக்கு சென்றார். அங்கு மழையால் கூரை ஒழுகுவதை சரி செய்ய சிமெண்ட் ஓட்டின் மீது ஏறினார்.
அப்போது ஓடு உடைந்து மேலே இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிரதீப் ஏப்ரல் 18ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மகன் இறந்தது முதல் வேலுச்சாமியும், தீபாவும் அவர் நினைவாகவே தாங்க முடியாத மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இனி உயிரோடு இருந்து என்ன செய்ய போகிறோம். நாங்களும் செத்து போகிறோம் என்று உறவினர்களிடம் கூறி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் தீபா தனது உறவினர்களுக்கு வாட்ஸ்-அப்பில் “பிரதீப் குட்டியின் பிரிவை எங்களால் மறக்க முடியாது. நாங்களும் எங்கள் தங்கத்தை தேடி போகிறோம். எங்களின் இந்த முடிவுக்கு நாங்கள் மட்டுமே காரணம்’ என கூறப்பட்டு இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு வேலுச்சாமியும், தீபாவும் விஷம் குடித்த நிலையில் சடலமாக கிடந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





