உயிரை மாய்த்துக் கொண்ட கர்ப்பிணிப் பெண் : சர்ச்சையை கிளப்பிய கடைசி வட்ஸ்அப் மெசேஜ்!!

500

குடும்ப வன்முறையால் திருச்சூரில் கர்ப்பிணி தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சூரில் 23 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியாரின் தொடர் துன்புறுத்தலால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்களின் வரிசையில் இந்த சோகமும் இணைந்துள்ளது.

வெல்லங்குளாரில் வசிக்கும் நௌஃபல் என்பவரின் மனைவி ஃபசீலா, தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

உயிரிழப்பதற்கு முன், தனது தாய் மற்றும் சகோதரிக்கு வாட்ஸ்அப் மூலம் பல செய்திகளை ஃபசீலா அனுப்பியுள்ளார். அதில், தனது கணவர் தன்னை பலமுறை வயிற்றில் உதைத்ததாகவும், தனது கையை உடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது மாமியார் ரம்லாவும் தன்னை தொடர்ந்து துன்புறுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு செய்தியில், “இல்லையென்றால் அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்” என்று தனது தாயிடம் ஃபசீலா உருக்கமாகக் தெரிவித்துள்ளார்.

இந்த செய்திகளின் அடிப்படையில், ஃபசீலாவின் கணவர் நௌஃபல் மற்றும் மாமியார் ரம்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். உயிரை மாய்த்துக் கொள்ள தூண்டியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஃபசீலாவின் மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு, கொல்லத்தைச் சேர்ந்த 29 வயதான அதுல்யா சதீஷ் பல வருடங்களாக தனது கணவரின் துன்புறுத்தலை அனுபவித்து வந்த நிலையில், ஷார்ஜாவில் உயிரை மாய்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.