
வவுனியா நகரத்தில் பாதுகாப்பான போக்குவரத்து ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக வீதி சமிக்ஞை விளக்குகளை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 22.07.2025 அன்று பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற போக்குவரத்து அமைச்சின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்கா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவர் மேலும் தெரிவித்ததாவது,
வவுனியா நகரில் பொதுமக்களிற்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதுடன் பாதுகாப்பான போக்குவரத்தை ஏற்படுத்தும் முகமாக வீதிச் சமிக்ஞை விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்,
இது தொடர்பில் கடந்த 07.03.2025 அன்று பாராளுமன்ற அமர்வில் கோரிக்கை விடுத்திருந்ததுடன், தொடர்ச்சியாக அதுதொடர்பிலான முன்மொழிவு தன்னால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த செயற்பாட்டினை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்ற உறுப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வவுனியா நகரத்தை ஊடறுத்துச்செல்லும் கண்டி – யாழ் பிரதான வீதியில் காணப்படுகின்ற மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டம், வைத்தியசாலை சுற்றுவட்டம், பண்டாரவன்னியன் சுற்றுவட்டம், A29 பிரதான வீதியில் பள்ளிவாசல் சந்தி மற்றும் A30 பிரதான வீதியில் குருமண்காடு சந்தி ஆகிய இடங்களில் வீதி சமிச்சை விளக்குகளை பொருத்துவதற்கான முன்மொழிவினையும்,
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக சுயமாக இயக்ககூடிய பாதசாரிகள் கடவைக்கான சமிக்ஞை விளக்கு (Self Operated Pedestrian Crossing Signal Light) பொருத்துவதற்கான முன்மொழிவினையும் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





