வவுனியாவில் 558.5 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றல் : மூவர் மீது விசாரணை!!

1346

வவுனியாவில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 558.5கிலோ நிறையுடைய மாட்டிறைச்சி மாநகரசபையால் நேற்றையதினம் (04.08.2025) மாலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த இறைச்சினை ஏற்றிச்செல்ல முற்பட்ட இரு முச்சக்கரவண்டியும் மாநகரசபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இதனுடன் தொடர்புபட்ட மூவர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கிளிநொச்சியில் இருந்து நேற்று மாலை வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் உரிய பாதுகாப்பு வசதிகள் இன்றி பெருந்தொகை மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டுள்ளது. அவை வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்து பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு மீண்டும் முச்சக்கரவண்டியில் ஏற்றிச்செல்லப்படவிருந்தது.

சம்பவம் தொடர்பாக வவுனியா மாநகரசபை முதல்வருக்கு பொதுமக்களால் முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து மாநகர முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் உத்தரவிக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற மாநகரசபையின் துணை முதல்வர் ப.கார்த்தீபன் மற்றும் சபை உறுப்பினர் அருணன், பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் குறித்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தியதுடன் குறித்த இறைச்சியினை கைப்பற்றினர்.

மீட்கப்பட்ட இறைச்சியின் நிறை சுமார்558.5 கிலோ என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இறைச்சி சுகாதார பரிசோதகரின் மேற்பார்வையில் எடைபார்க்கப்பட்டு மாநகரசபையினரினால் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதுடன் இறைச்சினை ஏற்ற பயன்படுத்தப்பட்ட இரு முச்சக்கரவண்டிகளும் மாநகரசபையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மேலும் இதனுடன் தொடர்புடைய மூவர் மீது மாநகர சுகாதாரப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மாநகரசபையினர் முன்னெடுத்து வருகின்றனர்.