
வவுனியாவில் பல்கலைக்கழகத்திற்கு அருகே 4 ஏக்கர் அரச காணி தனியாரினால் அபகரிக்கப்பட்ட நிலையில் அக்காணியினை கையப்படுத்தி பிரதேச செயலகத்திற்கு வழங்குமாறு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2024ம் ஆண்டு இறுதியில் தனியாரினால் குறித்த அரச காணியினை அபகரிக்கப்பட்டமையுடன் தொடர்ச்சியாக ஏனைய தனிநபர்களினாலும் காணி தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டன.

இதனையடுத்து இவ்வருடம் ஆரம்பத்தில் பிரதேச செயலகத்தினால் அரச காணியிலிருந்து வெளியேறுமாறு முதலாவது வெளியேற்றல் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது.

மேலும் அவ் வெளியேற்றல் கட்டளையினை ஏற்றுக்கொள்ளாமையினால் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டது. இவ் வழக்கினை பிரதேச செயலாளர் இந்திரராசா பிரதாபன் மற்றும் காணி உத்தியோகத்தர் வசந்தன், காணிக்கிளை அதிகாரிகள் அரச காணிகளுக்கான ஆவணங்களை வழங்கி வழக்கினை வாதாடி வந்தனர்.

இந்நிலையில் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் குறித்த அரச காணியிலுள்ளவர்களை வெளியேற்றி காணியினை பிரதேச செயலகத்திற்கு கையளிக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

நீதிமன்ற பதிவாளரின் தலைமையில் தனியாரினால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு சென்ற கிராம சேவையாளர் நிலான் , குடியேற்ற உத்தியோகத்தர் பண்டார, நீதிமன்ற மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சகிதம் சகிதம் சென்ற குழுவினர்,

அரச காணியிலுள்ளவர்களை வெளியேறுமாறு தெரிவித்தமையுடன் கட்டிடங்களை இடித்து காணியினை பிரதேச செயலக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறும் இன்று முதல் இக் காணி பிரதேச செயலக காணி என தெரிவித்து காணியிலிருந்து ஒரு பிடி மண்ணை நீதிமன்ற பதிவாளர் கையில் எடுத்து குடியேற்ற உத்தியோகத்தர் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோரின் கையில் ஒப்படைத்தார்.






