வவுனியா கனகராயன்குளம் பெரியகுளம் கிரவல் குவாரி வவுனியா வடக்கு தவிசாளரினால் முற்றுகை!!

2499

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட கனகராயன்குளம் வடக்கு, பெரியகுளம் பகுதியில் பிரதேசசபையின் அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்ட கிரவல் குவாரியின் செயற்பாடுகள் வவுனியா வடக்கு பிரதேசபையின் தவிசாளர் திருநாவுக்கரசு கிருஷ்ணவேணியின் நடவடிக்கையினையடுத்து முற்றுகை செய்யப்பட்டதுடன், உடனடியாக மறுஅறிவித்தல் வரை அகழ்வுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குறித்த கிரவல் குவாரிக்கு தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் திடீர் விஜயமொன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது பிரதேசசபையின் அனுமதியின்றி குவாரியின் செயற்பாடுகள் இடம்பெற்றமையினால் மறுஅறிவித்தல் வரை கிரவல் குவாரியின் செயற்பாட்டை நிறுத்தி வைக்குமாறு தவிசாளர் அதிரடியான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த விஜயத்தின் போது பொலிசாரும் வருகைதந்திருந்ததுடன் தொடர்ச்சியாக அனுமதியின்றி கிரவல் அகழ்வு செயற்பாடு முன்னெடுக்கப்படுமாகவிருந்தால் அவர்கள் மீது சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்படுமென தவிசாளர் மற்றும் பொலிசாரினால் உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.