மின்னேரியா – ஹபரணை வீதியில் விபத்து : காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!!

712

மின்னேரியா – ஹபரணை வீதியில் பட்டுஓயா பகுதியில் தனியார் பஸ்ஸொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (13) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பொலன்னறுவை பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் வண்டி ஒன்றுடன் எதிர்த்திசையில் பயணித்த லொறி ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் மின்னேரிய பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை மாவட்ட பெரியாஸ்பத்திரி,ஹபரனை மற்றும் ஹிங்குரன்கொட ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஆறுபேர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த 32 பேரில் 26 பேர் சாதாரண வாட்டுக்களில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டார தகவல் மூலம் தெரியவந்துள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை மின்னேரியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் விஜயவீர தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.