ஆலய கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியவர் கீழே விழுந்து மரணம்!!

1021

தமிழகத்தில் விராலிமலை முருகன் கோவில் ராஜகோபுரத்தில் உச்சியில் தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்திய நபர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

தமிழ்நாட்டின், புதுக்கோட்டை விராலிமலை அருகே உள்ள கொடும்பலூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், சமூக ஆர்வலரான இவர் விராலிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான மலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விராலிமலை செல்போன் கோபுரத்தில் ஏறி கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினார்.

அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானம் செய்தனர். இந்த நிலையில் இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின நாளான வெள்ளிக்கிழமை (15) காலை சுமார் 5 மணி அளவில் விராலிமலை முருகன் கோவில் ராஜகோபுரத்தில் உச்சியில் அவர் தேசியக் கொடியுடன் திடீரென்று ஏறினார்.

கோவில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். கலெக்டர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பியவாறு அங்கு நின்றவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்த விராலிமலை வட்டாட்சியர் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் சுதா, விராலி மலை காவல் ஆய்வாளர் லதா, இலுப்பூர் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தீயணைப்புத் துறையினர் மாற்றுத்திறனாளி ஆறுமுகத்தை மீட்க கோவில் கோபுரம் மீது ஏறியபோது தானே வருவதாக கூறி உள்ளார். இதையடுத்து இறங்க முற்பட்டபோது தவறி விழுந்த அவர் உயிரிழந்தார்.

கோவில் கோபுரத்தில் இருந்து இறங்கியபோது மாற்றுத்திறனாளி ஆறுமுகம் தவறி விழுந்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.