
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நண்பர்கள் 12 பேர் ஒன்று சேர்ந்து பெங்களூரில் இருந்து டெம்போ டிராவலர் வண்டியில் இன்ப சுற்றுலாவாக பாண்டிசேரிக்கு வந்துள்ளனர்.
பாண்டிச்சேரியில் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டு, ஆனந்தமாக கடற்கரையில் செல்ஃபி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்து, கடலில் குளிப்பதற்காக இறங்கி ஆட்டம் போட்டனர்.
அந்த பகுதியில் ஆழம் அதிகம் என்றிருந்த எச்சரிக்கை கயிற்றை கவனிக்காமல் அதைத் தாண்டியும் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடலில் குளித்தவர்களில் பெண் என்ஜினியர் உட்பட 5 பேர் திடீரென கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த மேகா (29), ஹூப்ளியைச் சேர்ந்த மேத்தி (23), குஜராத்தைச் சேர்ந்த அதிதி (23), ஜீவன் (23), விஜயவாடாவைச் சேர்ந்த பவன்குமார் (25) உட்பட 12 பேர் ஒரு டெம்போ டிராவலர் வாகனத்தில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த நிலையில் அரியாங்குப்பம் அருகே சின்னவீராம்பட்டினத்தில் உள்ள “ஈடன்” கடற்கரையில் குளித்த போது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
அலையில் சிக்கிய மேகா, பிரட்சுவால் மேத்தி, பவன்குமார், அதிதி, ஜீவன் ஆகிய 5 பேரும் கூச்சலிட்ட நிலையில் அருகில் நின்ற நண்பர்களும், பொதுமக்களும் காப்பாற்ற முயன்றனர்.
அங்கிருந்த மீனவர்கள் கடலில் இறங்கி மூழ்கிய 5 பேரையும் கடற்கரைக்கு இழுத்து வந்த நிலையில், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் 3 பேர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
மேகா, மேத்தி, பவன்குமார் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சந்தோஷமாக சுற்றுலா வந்த நிலையில், நண்பர்கள் 3 பேரை பறிகொடுத்த துயரம் சோகத்தில் ஆழ்த்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





