பங்குச்சந்தையில் லட்சக்கணக்கில் இழந்த இளம்பெண் கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவு!!

550

பங்குச்சந்தையில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த நிலையில், உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு இளம்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த அருணின் மனைவி வனஜா (32). இந்த தம்பதியர் மகன்களுடன் சொந்த வீட்டில் வசித்து வரும் நிலையில் மாற்றுத் திறனாளியான அருண், பெயிண்டிங் டிசைனர் ஆக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு வனஜா, ‘யூடியூப்’ பார்த்து ஆன்லைனில் ஷேர் மார்க்கெட்டில் சிறிய அளவில் பணத்தை ஆரம்பத்தில் முதலீடு செய்தார்.

அதில் அவர் வாங்கிய ஷேர்கள் இரண்டு மடங்கு உயர்ந்து அதிக வருமானம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிக பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என எண்ணிய வனஜா,

தனது கணவருக்கு தெரியாமல் கடன் செயலி மூலம் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கி, அந்த பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தார். ஆனால் அதில் லாபமும் கிடைக்காமல், முதலீடு செய்த பணத்தையும் இழந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் வாங்கிய கடனையையும் அடைக்க முடியாத நிலையில், கடனை கேட்டு தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிகிறது. இதில் மனமுடைந்த வனஜா,

தனது வீட்டில் யாரும் இ்ல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்,

வனஜா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே தற்கொலை செய்த வனஜாவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில், தற்கொலைக்கு முன்னதாக வனஜா பதிவு செய்து வைத்திருந்த 3 ஆடியோக்கள் இருந்தன.

அதில் ஒரு ஆடியோவில், “நான் தனியார் வங்கியில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கியதால் கடனை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறி தனது கணவருக்கு ‘வாட்ஸ்அப்’பில் அனுப்பிவிட்டு அவர் தற்கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.