
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெற்றது.
முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி, இலங்கையை வீழ்த்தி ஒருநாள் போட்டிகளில் தங்கள் ஆதிக்கத்தை காட்டியது. இந்நிலையில் நேற்று 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
தொடக்க வீரர்களான டில்ஷான் 13 ஓட்டங்களிலும், தரங்க 27 ஓட்டங்களிலும் வெளியேறினர். 10 ஓவர்கள் முடிவில் இலங்கை 62 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இதையடுத்து கைகோர்த்த ஜெயவர்த்தன, மத்யூஸ் ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஓட்டங்களை உயர்த்தியது.
ஜெயவர்த்தனே 67 ஓட்டங்களும், அணித்தலைவர் மேத்யூஸ் 93 ஓட்டங்களும் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் திசர பெரேரா அதிரடி காட்டினார். பாகிஸ்தான் அணி வீரர்களின் பந்து வீச்சை சிக்ஸர்களாய் பறக்கவிட்டார். இவர் 36 பந்துகளில் 65 ஓட்டங்களை ( 5 பவுண்டரி, 4 சிக்ஸர்) பெற்றுக்கொண்டார்.
சிறப்பாக விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழந்து 310 ஓட்டங்கள் எடுத்தது.
இதன் பின்னர் 311 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் 12.4 ஓவர்களில் ஒரு விக்கட்டுகளை மட்டும் இழந்து 100 வலுவான நிலையில் இருந்தது.
ஹபீஸ் (62) அணித்தலைவர் மிஸ்பா (36) பவத் ஆலம் (30), அப்ரிடி (17) என வரிசையாக ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 43.5 ஓவர்களில் 233 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து 77 ஓட்டங்களால் படுதோல்விஅடைந்தது.
இலங்கை அணி சார்பாக திசர பெரேரா 3 விக்கட்டுக்களை கைப்பற்றினர். இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக திசர பெரேரா தெரிவுசெய்யப்பட்டார்.





