வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை!!

1777

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களுக்கு தவிசாளர் பா.பாலேந்திரன் தலைமையிலான குழுவினர் திடீர் விஜயமொன்றினை முன்னெடுத்திருந்தமையுடன் இறுதி அறிவித்தலையும் விடுத்திருந்தனர்.

நெளுக்குளம் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களுக்கு தவிசாளர் தலைமையில் சென்றிருந்த குழுவினர் உணவகங்களை சோதனைக்குட்படுத்தியிருந்தனர்.

இதன் போது அவற்றில் ஒர் உணவகம் சுகாதார விதிமுறைகளை மீறி காணப்பட்டமை சுகாதார பரிசோதகரினால் உறுதி செய்யப்பட்டிருந்தமையுடன் அவ் உணவகத்திற்கு இறுதி அறிவித்தலும் வழங்கப்பட்டது.

மேலும் வர்த்தக நிலையங்களுக்கு சென்றிருந்த குழுவினர் வியாபார உரிமைப்பத்திரத்தினை சோதனைக்குட்படுத்தியமையுடன் உரிமைப்பத்திரம் இன்றி காணப்பட்ட வியாபார நிலையங்களை உடனடியாக அவற்றினை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவித்தல் வழங்கப்பட்டது.

அத்துடன் மீன் வியாபாரம் மேற்கொண்ட இடத்திற்கு சென்ற குழுவினர் அங்கு கழிவு அகற்றுவதிலுள்ள சிக்கல் தொடர்பிலும் வீதியிலுள்ள பாகங்களை அகற்றுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தனர். மேலும் இவற்றினை மூன்று தினங்களுக்குள் நிவர்த்தி செய்யாவிடில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்திருந்தனர்.

மேலும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான திடீர் விஜயங்களின் போது சட்டங்களை மதிக்காமை மற்றும் பிரதேச சபையின் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது உடனடி சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்திருந்தார்.