
இங்கிலாந்து அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் 133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1–3 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி, அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன் 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ஓட்டங்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரராக களமிற்ங்கிய ஷிகர் தவான் 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கோஹ்லி களமிறங்கினார். டெஸ்ட் போட்டிகளின் மோசமான ஆட்டத்திற்கு விடைகொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 பந்துகளில் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
ரோகித் ஷர்மா, அணித்தலைவர் டோனி இருவரும் அரைசதம் கடந்து தலா 52 ஓட்டங்களும், ரஹானே 41 ஓட்டங்களும் எடுத்தனர். சுரேஷ் ரெய்னா 100 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில், வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், டிரெட்வெல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன்பின் மழை பெய்ததால் இங்கிலாந்து அணிக்கு இலக்கு 47 ஓவர்களில் 295 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். அதிகபட்சமாக ஹேல்ஸ் 40 ஓட்டங்களும், மோர்கன் 28 ஓட்டங்களும் எடுத்தனர்.
38.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 161 ஓட்டங்கள் மட்டும் எடுத்து 133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
இந்திய சார்பில் ரவிந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், சமி, அஸ்வின் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக சுரேஷ் ரெய்னா தெரிவுசெய்யப்பட்டார்.





