கனமழை வெள்ளத்தில் சிக்கி தமிழர் குடும்பத்துடன் பலியான சோகம்!!

527

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் மிகக் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அங்கு பஸ்தார், பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் பல நதிகள் நிரம்பி வழிகின்றன. அதே நேரத்தில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநில அரசு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பஸ்தார் மாவட்டத்தில் கங்கர் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய கால்வாயை ஒரு கார் கடக்க முயற்சித்த போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் அந்த தம்பதியினர், 2 மகள்களுடன் பலியாகினர்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த காரில் பயணித்தது தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. அதன்படி இறந்தவர்கள் ராஜேஷ்குமார் (வயது 43), அவரது மனைவி பவித்ரா(40), அவர்களது 2 மகள்கள் சவுஜன்யா (7) மற்றும் சவுமியா (4)

இதில் ராஜேஷ்குமார், ராய்ப்பூரில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வந்தார். அவர் குடும்பத்தினருடன் பஸ்தாருக்கு காரில் சுற்றுலா சென்றிருந்தார். நேற்று முன்தினம் கால்வாயில் வெள்ளத்தை கடக்க முயன்றபோது அவர்களது காரை வெள்ளம் இழுத்துச்சென்றது.

அன்று மாலையில் கால்வாயில் நீர்மட்டம் குறைந்தபிறகு 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது சடலங்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பாரண்டப்பள்ளி கிராமத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.