நாட்டில் அரிசி விலை உயர்வு, தட்டுப்பாடு : மக்கள் அவதி!!

1013

Rice

சந்தையில் அரிசி விலை திடீரென உயர்வடைந்துள்ளமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு இன்னும் இரண்டு வாரங்களில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதி அமைச்சர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில் அரிசி விலை திடீரென உயர்வடைந்துள்ளதோடு சில அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நுகர்வோர் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அரிசிக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ள போதும் அந்த விலைக்கு சந்தையில் அரிசி கொள்வனவு செய்ய முடியாதுள்ளதென நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோ கிராம் சிவப்பு அரிசி 66 ரூபா என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும் சந்தையில் சிவப்பு அரிசி ஒரு கிலோ கிராம் 80 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல பகுதிகளில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இதேவேளை, நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்யுமாறு நிதி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்கள் சிலர் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ அரிசி இறக்குமதி செய்ய ஆலோசனை வழங்கினார். ஆனால் நிதி அமைச்சின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் குறித்த ஆலோசனைக்கு அமைய செயற்படத் தவறியுள்ளனர்.

இதனால் சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாடு மேலும் அதிகரிப்பதோடு விலை உயர்வு மற்றும் அரிசி தட்டுப்பாட்டினால் நுகர்வோர் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.