
மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் பாதுகாப்பாற்ற ரயில் கடவையில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்த சம்பவம் நேற்று (02.09.2025) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் களுவன்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த, இரண்டு குழந்தைகளின் தந்தையே (வயது 26) உயிரிழந்துள்ளார்.
குறித்த ரயில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அவ்வேளை வாகன சாரதியான இந்த நபர் களுவன்கேணி பிரதேசத்திலிருந்து செங்கலடி நகரத்துக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையிலேயே ரயிலில் மோதி படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதனையடுத்து, காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கான பயண உதவியாக, ரயில் சாரதி, ரயிலை பின்னோக்கிச் செலுத்தி, ஏறாவூர் ரயில் நிலையத்தில் விபத்துக்குள்ளானவரை ஒப்படைத்துள்ளார். எனினும், அங்கு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று அவதானித்ததோடு, வைத்தியசாலைக்குச் சென்று சடலத்தை பாவையிட்ட பின்னர் மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் 1400க்கும் மேற்பட்ட ரயில் கடவைகள் இருந்தும் கிட்டத்தட்ட 400 கடவைகளே பாதுகாப்பற்றதாக காணப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.





