
மனைவியை விட்டு பிரிந்து சென்று கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த கணவனை; இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் மனைவி கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டை விட்டு வெளியேறிய கணவர் வேறொரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. உத்தரபிரதேச மாநிலம் ஹர்டொய் மாவட்டம் முரார்நகரை சேர்ந்தவர் ஷிலூ. இவருக்கும் ஜிதேந்தர் என்பவருக்கும் கடந்த 2018ல் திருமணமானது.
ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பிணியான மனைவி ஷிலூவை விட்டு விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார் ஜிதேந்தர்.
பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில், தலைமறைவான ஜிதேந்தர் குறித்து அவரின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி தேடி வந்தனர்.
தீவிர விசாரணைக்குப் பின்னரும் ஜிதேந்தர் சென்ற இடம் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் போலீசார் தேடுதல் பணியை கைவிட்டனர். கணவர் தலைமறைவான நிலையில், தனது தாயார் வீட்டில் வாழ்ந்து வருகிறார் ஷிலூ.
இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் கணவர் ஜிதேந்தரை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் ஷிலூ கண்டுபிடித்துள்ளார்.
ஷிலூ தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துகொண்டிருந்தபோது அதில் தனது கணவர் வேறொரு பெண்ணுடன் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டிருந்ததை கண்டுபிடித்தார்.
உடனடியாக இது குறித்து ஷிலூ போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது, ஜிதேந்தர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வசித்து வருவதும் அங்கு வேறொரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, பஞ்சாப் சென்ற உத்தரபிரதேச போலீசார் ஜிதேந்தரை கைது செய்தனர்.
பெண்ணை திருமணம் செய்துவிட்டு அவரை ஏமாற்றி தலைமறைவாகி 2வது திருமணம் செய்தது உள்பட பல்வேறு குற்ற பிரிவுகளில் ஜிதேந்தரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.





