5 வருட காதல் : காதலன் நடத்தையில் மாற்றத்தால் இளம்பெண் விபரீத முடிவு!!

636

5 வருடங்கள் காதலித்து வந்த நிலையில், காதலனின் நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டதாலும், தொடர்ந்து திருமணத்தை தள்ளிப்போட்டு வந்ததாலும் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்தவர் லதா (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் எலெக்டரீசியனாக பணியாற்றி வருகிறார்.

லதா பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இதனால் அவர் ராஜாஜிநகர் காயத்திரி நகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து வந்தார்.

ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், லதா, ரஞ்சித் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு 2 பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ரஞ்சித் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அவரது நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதாவது லதாவுடன் முன்புபோல் பேசி, பழகுவதை அவர் தவிர்த்ததாக தெரிகிறது. இதனால் காதலர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அதுபோல் நேற்று முன்தினம் இரவும் லதா-ரஞ்சித் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த லதா, தான் தங்கியிருந்த வாடகை வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சுப்பிரமணிய நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலர்கள் இடையே ஏற்பட்ட சண்டையில் விரக்தி அடைந்து லதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து லதா உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.