எல்ல விபத்து பேருந்தை வாங்கிய செலவை விட வடிவமைப்பு செலவு அதிகம்!!

649

எல்ல பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தை 55 இலட்சத்திற்கு வாங்கியதாகவும் அதனை 70 இலட்சம் பெறுமதியில் வடிவமைப்பு செய்ததாகவும் பேருந்து உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாலிய பண்டார இன்று(12.09.2025) ஊடகங்களுக்கு வெளியிட்ட சிறப்பு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பேருந்து விபத்து தொடர்பான விசாரணையில் தானும் பங்கேற்றதாகவும், பேருந்தின் உரிமையாளருடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்ததாகவும் பண்டார கூறியுள்ளார்.

பேருந்தின் வடிவமைப்பிற்காக அதிக பணம் செலவிடப்பட்டிருந்தாலும் அதனை சரியான முறையில் பராமரிக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பேருந்து சக்கரங்களின் ட்ரம் பகுதி வெப்பமடைவதால் அதனை செங்குத்தான சாலைகளில் செலுத்தும் போது, ப்ரேக் செயலிழப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என பண்டார கூறியுள்ளார்.

அத்துடன், சுற்றுலா செல்வோர், தாங்கள் தேர்ந்தெடுக்கும் வாகனத்தின் பாதுகாப்பு, வாகனம் முறையாக பராமரிக்கப்படுகிறதா மற்றும் வாகன ஓட்டுனரின் பழக்கவழக்கம் குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.