
தொழிலதிபரின் மனைவியைக் கட்டிப்போட்டு, குக்கரால் தாக்கி நகை, பணத்தைக் கொள்ளையடித்து சென்றது ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் கூகட்பள்ளியில் ஸ்வான் லேக் கிரேடட் கம்யூனிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராகேஷ்அகர்வால். தொழிலதிபரான இவரது மனைவி ரேணு அகர்வால்.
இவர்களது வீட்டில் கடந்த 9 ஆண்டுகளாக ஜார்க்கண்ட்டை சேர்ந்த ரோஷன் என்பவர் சமையல்காரராக பணிபுரிந்து உள்ளார்.
ராகேஷ் குடும்பத்தினர் ரோஷனிடம் தங்கள் வீட்டுக்கும் ஒரு சமையல்காரர் வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதன்படி ஹர்ஷா என்பவரை கடந்த 11 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்த்துள்ளார்.
இந்நிலையில் ராகேஷ் நேற்று தனது மகனுடன் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். மாலை 6 மணியளவில் ராகேஷ் தனது வீட்டிற்கு போன் செய்துள்ளார்.
பலமுறை போன் செய்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவர் உடனடியாக வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்கவில்லை.
இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மனைவி ரேணுஅகர்வால் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தது.
தலையில் குக்கரால் தாக்கியும் உடல் முழுவதும் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டுள்ளார். அருகே உள்ள மேஜை மீது ரத்தக்கறை படிந்த குக்கர் இருந்தது. புதிதாக வேலைக்கு சேர்ந்த ஹர்ஷாவை காணவில்லை.
இதுகுறித்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் உறவினர் வீட்டில் வேலை செய்யும் ரோஷனும், ஹர்ஷாவும் சேர்ந்து, ரேணுஅகர்வாலிடம் நகை, பணம் எங்கே என கேட்டு மிரட்டியுள்ளனர்.
அவர் தெரிவிக்க முரண்டு பிடித்ததால் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து கைகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் கை, கால்களை கட்டிவிட்டு குக்கரை எடுத்து வந்து தலையில் தாக்கியுள்ளனர். மேலும் கத்தியாலும் பல இடங்களில் குத்தியுள்ளனர்.
அவர் உயிரிழந்த பிறகு ரத்தக்கறை படிந்து தங்களது உடைகளை கழற்றி போட்டுவிட்டு பாத்ரூமில் குளித்துள்ளனர்.
அதன்பிறகு ரேணுவின் மகன் சுபத்தின் உடைகளை அணிந்து கொண்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு லிப்ட் வழியாக தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை கொலை செய்து விட்டு நகை, பணத்துடன் தப்பிச்சென்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.
மேலும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசாரும் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





