காதலியை நடுரோட்டில் குத்திக் கொன்ற காதலன் எடுத்த விபரீத முடிவு!!

633

தனது செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலியை நடுரோட்டில் வழிமறித்து ஆத்திரம் தீர காதலன் கத்தியால் குத்திக் கொலைச் செய்து விட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகா கோகர்ணா அருகே பூஜாரிபெட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரக்‌ஷிதா(23).

இவர் மணிப்பால் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் கார்த்திக் பூஜாரி.

இந்நிலையில் ரக்‌ஷிதாவும், கார்த்திக் பூஜாரியும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்களது காதலுக்கு ரக்‌ஷிதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் ரக்‌ஷிதா தனது காதலில் உறுதியாக இருந்தார்.

அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கார்த்திக்கிடம் வலியுறுத்தினார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இதையடுத்து ரக்‌ஷிதாவுக்கும், கார்த்திக்கிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தனது பெற்றோரின் அறிவுரையை ரக்‌ஷிதா கேட்டார். அவர் கார்த்திக்குடன் பேசுவதை நிறுத்தினார்.

மேலும் அவர் செல்போன் எண்ணையும் தனது செல்போனில் ‘பிளாக்’ செய்தார். இதனால் கார்த்திக் ஆத்திரம் அடைந்தார். இந்நிலையில் நேற்று காலையில் ரக்‌ஷிதா வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை தனது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற கார்த்திக், பிரம்மாவர் புறநகர் பகுதியில் வைத்து வழிமறித்தார். மேலும் அவர் காதலை கைவிட்டது குறித்து ரக்‌ஷிதாவிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ரக்‌ஷிதாவை சரமாரியாக குத்தினார். இதில் ரக்‌ஷிதா பலத்த கத்திக்குத்து காயம் அடைந்தார். இதையடுத்து கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் ஓடி வந்து ரக்‌ஷிதாவை மீட்டு சிகிச்சைக்காக மணிப்பாலில் உள்ள கே.எம்.சி. அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரக்‌ஷிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பிரம்மாவர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார்த்திக்கை தேடி வந்தனர். இந்த நிலையில் கார்த்திக், அந்தப்பகுதியில் உள்ள கிணற்றில் நேற்று இரவு பிணமாக மீட்கப்பட்டார்.

இதனை அறிந்த போலீசார் விரைந்து சென்று கிணற்றில் பிணமாக கிடந்த கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், போலீசுக்கு பயந்து கார்த்திக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பிரம்மாவர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.