CIDயை மிரள விட்ட பாடசாலை மாணவன் : புது சைக்கிளுக்காக அரங்கேற்றப்பட்ட கடத்தல் நாடகம்!!

928

இரண்டு மாதங்களுக்கு முன்பு இரத்தினபுரி கஹதுடுவ பகுதியில் வைத்து 15 வயதுடைய சிறுவன் ஒருவன் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சம்பவம் புதிய சைக்கிளை பெறுவதற்காக மாணவனே போட்ட திட்டம் என பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது அவர் ஓட்டிச் சென்ற பழைய சைக்கிள், கஹதுடுவவில் உள்ள மினுவன்வில காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிலியந்தலையில் உள்ள ஒரு தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் குறித்த சிறுவன், ஜூலை 16 திகதி மாலை 4.00 மணியளவில் பிரத்தியேக வகுப்பில் கலந்து கொள்வதற்காக தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கஹத்துடுவ மயானத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வேனில் வந்த குழுவினரால் சைக்கிளுடன் கடத்தப்பட்டு தப்பி வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மாணவனின் வாக்குமூலங்களின் அடிப்படையில், கஹதுடுவ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையில் குறித்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ​​மாணவன் கடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவனின் பாடசாலை நண்பர்கள் மூவரை பலமுறை விசாரித்ததில், மாணவன் தான் கடத்தப்பட்டதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை என்பதையும், பழைய சைக்கிளுக்கு பதிலாக புதிய சைக்கிளை வாங்கித் தருவதாக மட்டுமே கூறிக் கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மாணவனிடம் விசாரணை நடத்திய போது தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் புதிய சைக்கிளை பெற்றுக்கொள்ளவே இவ்வாறு நாடகமாடியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

தன் நண்பர்கள் அனைவரிடமும் புதிய சைக்கிள் இருப்பதாகவும் தந்தையிடமிருந்து புதிய சைக்கிளை பெற்றுக்கொள்ளவே இவ்வாறு செய்ததாகவும், நான் பொலிஸாரிடம் மாட்டடிக்கொள்வேன் என தெரிந்தே அதனை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.