நன்றாக படிக்காததால் மகனை வீட்டிற்கு அனுப்பிய பள்ளி நிர்வாகம் : விரக்தியில் தாய் விபரீத முடிவு!!

490

சரியாக படிக்கவில்லை என்று கூறி மகனை பள்ளியில் இருந்து பாதியில் நிறுத்தியதால். தனது மகனின் படிப்பு பாழாகிவிட்டதே என கருதிய தாய், விரக்தியில் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர், ராதாகிருஷ்ணன் ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (42). கூலித்தொழிலாளியான இவருடைய மனைவி தீபா (40). இவர்களது மகன் வீட்டிற்கு அருகிலேயே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் உங்கள் மகன் சரியாக படிக்கவில்லை என்று கூறி, பொதுத்தேர்வு எழுத வேண்டாம் என பள்ளி நிர்வாகம் பாதியிலேயே மகனை பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தனது மகனின் படிப்பு பாழாகிவிட்டதே என தீபா விரக்தியடைந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போல் செல்வம் வேலைக்கு சென்றுவிட்டார்.

மகனும் வெளியே சென்றிருந்தார். இதனால் வீட்டில் தனியாக இருந்த தீபா, ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டினார். பின்னர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே வீட்டுக்கு வந்த செல்வம், வீட்டின் அறை பூட்டப்பட்டு இருப்பதை பார்த்தார். கதவை தட்டி பார்த்தார். ஆனால் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், கதவை உடைத்து திறந்து பார்த்தார்.

அப்போது தீபா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து,

தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.