
உத்தரபிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மழை நீரில் அறுந்து கிடந்த மின்சார வயரை, பள்ளி முடிந்து வீடு திரும்பிய சகோதரிகள் மிதித்த நிலையில்,
சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாரிய ஊழியர்களின் அலட்சியமே சிறுமிகளின் உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள ஜிராபஸ்தி கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஆஞ்சல் யாதவ்(15).
இவரது தங்கை ஆல்கா யாதவ்(12), 6-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒன்றாக பள்ளிக்கு சென்று வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை சகோதரிகள் இருவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் தேங்கி இருந்த மழைநீரில் மின்சார வயர் அறுந்து கிடந்தது தெரியாமல் அதில் இருவரும் கால் வைத்துள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சார வாரிய ஊழியர்களின் அலட்சியமே சிறுமிகளின் உயிரிழப்புக்கு காரணம் என அவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





