
புதிய வாகனங்களை வாங்குவதில் மக்களின் ஆர்வம் குறைந்துள்ளதால் வாகன இறக்குமதி நிறுவனங்கள் வாங்குபவர்களை ஈர்க்க விளம்பர பிரச்சாரங்களை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பல மாதங்களாக இறக்குமதியில் ஏற்பட்ட அதிகரிப்பைத் தொடர்ந்து, புதிய வாகனங்களின் கொள்முதல் தேவை குறைந்துள்ளமையினால் வாகன இறக்குமதியாளர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இருப்பினும், நாட்டில் தேவையை பூர்த்தி செய்ய போதுமான புதிய வாகனங்கள் உள்ள நிலையில், மக்கள் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மானேஜ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய மாதங்களில் இறக்குமதி அளவு கணிசமாக உயர்ந்திருந்தாலும், ஆரம்ப தேவை பெரும்பாலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால் சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்க அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வாகன இறக்குமதி தடை நீக்கப்பட்டதிலிருந்து, இலங்கை வாகன இறக்குமதிக்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் செலவிட்டுள்ளது.
இலங்கை சுங்கத்துறையின் கூற்றுப்படி, டிசம்பர் 2024 முதல் ஜூன் 2025 வரை கிட்டத்தட்ட 50,000 மோட்டார் வாகனங்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதில் 14,047 மோட்டார் கார்கள் அடங்கும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் அந்நிய செலாவணி இருப்புகளைப் பாதுகாக்க 2020 முதல் 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை வாகன இறக்குமதிகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு 2025 ஆண்டு தளர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





