திடீரென வகுப்பறையில் சரிந்து விழுந்து 11ம் வகுப்பு மாணவன் மரணம்!!

561

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து 11ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் மணிகண்டன் நகர் நடைபாதை தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் வெங்கடேசன் (16), குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு முடிந்து நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற வெங்கடேசன் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசாரின் விசாரணையில் பள்ளி விடுமுறை நாட்களில் அதிகளவில் வெங்கடேசன் செல்போனை பயன்படுத்தி வந்ததாகவும் பள்ளிக்கு செல்லும் நாளில் தலை வலிப்பதாக கூறிவிட்டு சென்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்து இறந்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவர் இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.