
வவுனியா குருமன்காட்டு சந்தியில் உள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் இன்று (14.10.2025) திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த பகுதியில் இயங்கிவரும் உணவகம் ஒன்றில் நேற்றயதினம் கொள்வனவு செய்யப்பட்ட கோழி இறைச்சியில் புழுக்கள் இருந்துள்ளமை தொடர்பாக வவுனியா மாநகரசபைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்றையதினம் காலை மாநகரசபையின் பிரதி முதல்வர் ப.கார்த்தீபன், உறுப்பினர் சிறிஅருணன் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்ததுடன் அங்கிருந்த உணவங்கள் மீது திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது உணவகம் ஒன்றில் சுகாதாரசீர்கேடான முறையில் உண்பதற்கு ஒவ்வாத கோழிஇறைச்சி மற்றும் உணவுப்பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

குறித்த உணவுப்பொருட்கள் சுகாதாரப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அந்த உணவகம் மீது நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுப்பட்டது.

அத்துடன் சுகாதார நடைமுறைகளை பேணாமல் உணவங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பாகவும் இதன்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.










