தலை தீபாவளி கொண்டாடிய புதுப்பெண் கணவன் வேலைக்கு சென்றதால் எடுத்த விபரீத முடிவு!!

500

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணமான முதல் வருட தலை தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய புதுமணப் பெண் ஒருவர், கணவர் வேலைக்கு புறப்படுவதாக கூறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள குன்னத்தூர், களத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மச்சக்காளையின் இரண்டாவது மகள் ரூபிகா (21).

கடந்த ஜூலை மாதம் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டையாம்பட்டியைச் சேர்ந்த பாண்டி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பாண்டி திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

புதுமணத் தம்பதிகள் தீபாவளியைத் தலை தீபாவளியாக கொண்டாடும் நோக்கில் கடந்த அக்டோபர் 19ம் தேதி ரூபிகாவின் ஊரான களத்துப்பட்டிக்கு வந்தனர்.

குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இணைந்து தலைதீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய பின்னர், பாண்டி நேற்று மீண்டும் பணிக்கு திரும்புவதாக கூறியதில், ரூபிகா அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

“தலை தீபாவளிக்கு வந்தவுடனேயே ஏன் உடனே வேலைக்கு செல்ல வேண்டும்?” என்ற விவாதம் தம்பதியருக்குள் வாக்குவாதமாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்குவாதத்திற்குப் பிறகு பாண்டி வேலைக்கு புறப்பட்டு சென்றார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரூபிகா, குடும்பத்தினர் இல்லாத நேரத்தில் வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த தகவல் அறிந்த புழுதிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரூபிகாவின் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுமணத் தம்பதிகளின் மகிழ்ச்சி நிறைந்த தங்கள் தலைதீபாவளிக் கொண்டாட்டம், இப்படி துயரமாக மாறியிருப்பது கிராம மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.