
ஆந்திர மாநிலத்தில் ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து, படுக்கை வசதி கொண்ட தனியார் வால்வோ பேருந்து 40 பயணிகளுடன், நேற்று நள்ளிரவு பெங்களூருக்கு புறப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் கர்னூல் மாவட்டம் தெகுரு கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் மீது இருசக்கர வாகனம் ஒன்று மோதி அதன் அடியிலேயே சிக்கிக் கொண்டுள்ளது.
இதன் ,காரணமாக பேருந்தின் முன்பக்கத்தில் தீ பற்றிய நிலையில், தீ பேருந்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. விபத்து நிகழ்ந்த உடன் பேருந்து ஓட்டுநரும், கிளீனரும் தப்பி ஓடி விட்டனர்.

பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் பலருக்கு தீ பற்றியது உடனடியாக தெரியவில்லை.
தீ பற்றியதை அறிந்த பயணிகள் சிலர் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உயிர் தப்பியுள்ளனர். ஏசி பேருந்து என்பதால் ஜன்னல் கண்ணாடிகளை எளிதாக உடைக்க முடியாததன் காரணமாக பயணிகள் பலர் பேருந்தின் உள்ளே மாட்டிக்கொண்டனர்.
இந்த தீ விபத்தில் தற்போது வரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்ணாடியை உடைத்து தப்பித்த சிலர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்து தீயணைப்புதுறையினர் வந்து தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் அதற்கு முன்னர் பேருந்து முற்றிலுமாக எரிந்து விட்டது. காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.






