பேருந்து தீ விபத்தில் தமிழ் இளைஞன் உட்பட 20 பேர் உடல் கருகி பலி!

595

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் இருந்து 42 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ஆம்னி பேருந்து நேற்று (24.10.2025) அதிகாலை ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அருகே தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக 20 பேர் உயிரிழந்தனர்.

இரு சக்கர வாகனம் பேருந்துடன் மோதியதில், பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் இருந்த பயணிகள் பெரும்பாலும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

தீ விபத்தின்போது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உடனே பயணிகளை எழுப்பி வெளியேற்ற முயன்றனர். அதிலும் சிலர் மட்டும் அவசர வழியைப் பயன்படுத்தி வெளியேறினர்.

தீ திடீரென்று பரவியதால் 42 பயணிகளில் 15 பேர் உயிர் தப்பினர், மற்றவர்கள் தீயில் சிக்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்தி, சிக்கிய பயணிகளை மீட்க முயன்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த யுவன் சங்கர் ராஜா (22) உட்பட பலர் உள்ளனர். லட்சுமி என்பவரது மகனான யுவன் சங்கர் ராஜா, ஹைதராபாத் மருத்துவ ஆய்வகத்தில் பணியாற்றி வந்தார்.

தீபாவளி பண்டிகைக்கு பிறகு பெற்றோரை பார்க்கச் சென்ற அவர் பேருந்தில் பயணம் செய்திருந்த போது இந்த பரிதாப சம்பவத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பம் மற்றும் உறவினர்கள் இதை அறிந்து ஆழமான சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.