
பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் படிப்பில் முன்னணியில் இருந்த மாணவரை கொலை செய்த சம்பவத்தில், சக மாணவியின் தாய்க்கு ஆயுள் சிறை வழங்கப்பட்டது.காரைக்கால் நேருநகர் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் (48).
இவரது மனைவி மாலதி (40). இந்த தம்பதியரின் மகன் பாலமணிகண்டன் (13). பாலமணிகண்டன் காரைக்கால் நேரு நகரிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பில் படித்து வந்தார்.
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி, பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற பாலமணிகண்டன் வீடு திரும்பும் போது, சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரி (46) வழங்கிய விஷம் கலந்த குளிர்பானத்தைக் குடித்துள்ளார்.
இதன் காரணமாக உடல் பாதிப்பு ஏற்பட்டு, செப். 3ம் தேதி இரவு பால மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த போலீசாரின் விசாரணையில், இந்த சம்பவம் பள்ளியில் நடந்த போட்டியுடன் தொடர்புடையது என்றும், சகாயராணி விக்டோரி, பாலமணிகண்டனை போட்டியிலிருந்து வெளியேற்ற முயற்சி செய்ததாகவும், குளிர்பானத்தில் விஷம் கலந்து கொலை செய்து இருந்ததாகவும் தெரிய வந்தது.
இது குறித்து காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு, நீதிபதி ஆர். மோகன், சகாயராணி விக்டோரி மீது ஆயுள் சிறை மற்றும் ரூ.20,000 அபராதத்தை விதித்து தீர்ப்பு வழங்கினார். வழக்கில் அரசு வழக்கறிஞர் செல்வமுத்துக்குமார் ஆஜராகி இருந்தார்.





