இந்தியாவில் இடம்பெற்ற தடகள செம்பியன்சிப்பில் இலங்கை வீரர்களின் சாதனை!!

351

இந்தியாவின் ராஞ்சியில் நேற்று முடிவடைந்த 4ஆவது தெற்காசிய தடகள செம்பியன்சிப் 2025இல், தெற்காசியாவின் வேகமான ஆண் மற்றும் பெண் வீரர்களாக இலங்கை தடகள வீரர்கள் சாமோத் யோத்சிங்க மற்றும் சஃபியா யாமிக் ஆகியோர் சாதனை படைத்துள்ளனர்.

பாகிஸ்தானை தவிர ஆறு தெற்காசிய நாடுகள் பங்கேற்ற மூன்று நாள் செம்பியன்சிப்பில், இலங்கை வீரர்கள் தமது அதீத திறமையை வெளிக்காட்டியுள்ளனர்.

ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டியில் யோத்சிங்க 10.30 வினாடிகளில் இலக்கை எட்டினார், அதே நேரத்தில் யாமிக் பெண்கள் 100 மீட்டர் இறுதிப் போட்டியில் 11.53 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.

இதன்படி இருவரும் பிராந்தியத்தின் வேகமான தடகள வீரர்களாக தங்களை பதிவு செய்துள்ளனர். இலங்கையின் ஆண்கள் மற்றும் பெண்கள் 4 தர 100 மீட்டர் அஞ்சலோட்ட அணிகள் தங்கப் பதக்கங்களை வென்றன.

பிரமுதித் சில்வா, சந்துன் தியாலவத்த, இந்துசர விதுசன் மற்றும் சாமோத் யோத்சிங்க ஆகியோர் அடங்கிய ஆண்கள் 4தர100 மீட்டர் அஞ்சலோட்ட அணி 39.99 வினாடிகளில் ஓடி தங்கம் வென்றது.

இதற்கிடையில், தனஞ்சனா பெர்னாண்டோ, அமாசா டி சில்வா, ருமேசிகா ரத்நாயக்க மற்றும் சாஃபியா யாமிக் ஆகியோர் அடங்கிய பெண்கள் 4தர100 மீட்டர் அஞ்சலோட்ட அணி 44.70 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கத்தை வென்றது.

சர்வதேச அளவிலான ஓட்டப்பந்தய வீரரான கலிங்க குமாரகே ஆண்களுக்கான 400 மீட்டர் இறுதிப் போட்டியில் 46.21 வினாடிகளில் ஓடி வெற்றி பெற்றதன் மூலம் இலங்கையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

இதனடிப்படையில் இந்த செம்பியன்சிப் போட்டிகளில் இந்தியாவுக்கு சவால் விடும் வகையில் இலங்கை பதக்கங்களை பெற்றுக்கொண்டது இந்தியா 20 தங்கம் உட்பட 58 பதங்களை பெற்றது.

இலங்கை 16 தங்கம் உட்பட 40 பதக்கங்களை வெற்றி கொண்டது. இதேவேளை இந்தப்போட்டிகளில் பங்கேற்ற இரண்டு தமிழ் வீரர்களும் பதக்கங்களை பெற்றனர் குண்டு எறிதல் போட்டியில் யாழ்ப்பாணம், பருத்தித்துறையின் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் வெண்கலப்பதக்கத்தை பெற்றார்.

ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தலவாக்கலை மிட்ல்டன் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்சான் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.