
தெலங்கானா மாநிலத்தின் சங்காரெட்டி மாவட்டத்தில் எறும்புகள் மீதான கடுமையான பயம் காரணமாக 25 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாவட்டத்தை சேர்ந்த மனிஷா (25) என்ற இளம்பெண், ஸ்ரீகாந்த் என்பவரின் மனைவியாவார். இவர்களுக்கு 3 வயது மகள் ஒருவர் உள்ளார்.
சிறுவயது முதல் மனிஷாவுக்கு எறும்புகளைப் பற்றிய அச்சம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை மருத்துவ ரீதியாக “மிர்மெகோஃபோபியா” என அழைக்கின்றனர்.
இதற்காக மனிஷா தனது சொந்த ஊரான மஞ்சேரியில் உள்ள மருத்துவமனையில் ஆலோசனைகள் பெற்று வந்துள்ளார். சிகிச்சை பெற்றுவந்த நிலையிலும் பயம் குறையாததால் மனஅழுத்தம் அடைந்திருந்ததாகவும் தெரிகிறது.
கடந்த நவம்பர் 4 ம் தேதி தனது குழந்தையை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, வீட்டு வேலை செய்யப்போவதாக கூறிய மனிஷா, வீட்டிற்குள் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
மாலை வீட்டிற்கு திரும்பிய கணவர் ஸ்ரீகாந்த், கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது இந்த துயரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் கிடைத்த கடிதத்தில் “என்னை மன்னித்துவிடு ஸ்ரீ… என்னால் இந்த எறும்புகளுடன் வாழ முடியாது” என எழுதியிருந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





