
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவியின் திடீர் மரணத்தையடுத்து அவரது உடல் உறுப்புக்களை தானமாக வழங்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
அதற்கமைய சிறுநீரகங்கள் உட்பட உறுப்புகள் வேறு நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக வழங்கப்படவுள்ளது. கண்டியை சேர்ந்த 24 வயது மாணவி ஜெயதிலகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் பீடத்தில் தாதி மற்றும் குடும்ப சுகாதார பட்டப்படிப்பின் மூன்றாம் ஆண்டில் படித்து வந்தார்.
கடந்த 5 ஆம் திகதி பல்கலைக்கழகத்திலிருந்து வீடு திரும்பிய மாணவி, தனது வீட்டின் குளியலறையில் தவறி விழுந்துள்ளார்.

மறுநாள் அதிகாலை 2.00 மணியளவில் கண்டி தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் பெற்றோரின் விருப்பப்படி மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான உறுப்புகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவரது பிரேத பரிசோதனை கண்டி தேசிய மருத்துவமனையில் நடத்தப்பட்டது.
முதுகெலும்புகள் அழுத்தம் காரணமாக மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவே மரணத்திற்கான காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவ அறிக்கைகள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை பரிசீலித்த பின்னர், இதுவோரு திடீர் மரணம் என கண்டி தேசிய மருத்துவமனையின் மரண விசாரணை அதிகாரி உறுதி செய்துள்ளார்.





